Wednesday, October 14, 2009

* உயிரின் ஓசை *


மனதின் மௌன சேமிப்புகளை
தூரிகையில் மொழி பெயர்த்தேன் !
‘ நீ ‘...
*****
மஞ்சம் நெகிழ்ந்திடும்
மந்திர ரேகைகளின் ...
வேர் வருடி வினவுகின்றேன் !
‘ நீ '...
*****
விழி உதிர்க்கும் மோனப் புன்னகையை
கட்டவிழ்த்து இனம் காண்கிறேன் !
‘ நீ '...
*****
முகம் குளிர அகம் தழுவும்
நேச நிழல் தொட்டு...
கண்ணொற்றி கனவு காண்கிறேன் !
‘ நீ '...
*****
கண்ணொளிரும் பூங்குன்றே !
மொத்தத்தில் ...
*****
திரு நிறை திவ்யமாய் ...
திகட்டாத தனி எழிலாய் ...
தேனின்பப் பூம்பனியாய்...
நெஞ்சத்து நேசமெல்லாம்
உயிரிசையாய் குழைந்தொலிக்க,
******************************
“ நீயாகிறேன் நான் ”!
******************************

Friday, October 9, 2009

* கள்ளி'... கனி. *


** மனதின் கண்களுக்குள்
பூத்திருக்கும் புன்னகையே !
புன்னகைக்கும் பூந்தளிரே!
நின் —
கம்பீரக் கலையெழுதக்

கண் உறையக் காத்திருக்கேன் !

** புத்தொளிரும் மாமணி உன்
பூம்பாதம் தொட்டெடுத்து
திலகமென நிறைந்திருக்க
மதியுறைய விழித்திருக்கேன் !

** சூரிய சொல்லழகோ
சுனை நீரே நின் குணமோ
வண்டாடும் சோலை எல்லாம்
நின் மதி நிறைக்க ;

** தேன் வழியத் தித்திக்கும்
அகத் தழகே... !

அன்பின் அற்புதமே... !
உயிரோடு உயிராகி...
உயிரே உறைந்திருக்கேன். !

** எண்ணமெல்லாம் எடுத்துறைக்க
விடியலின் ஒளி குழைத்து
எனையே இழைத்தெழுதி
வினாக் குறியாய் வீற்றிருக்கேன் !


** யவ்வனத் தமிழிசையே !
என் நேசச் சித்திரமே !


* சிமிழ் இதழ் அரும்ப
செம்முத்தை சிந்திடுவாய் *

என் —
* சித்தம் குளிர்விக்கும்
அமுதம் நிறைத்திடுவாய் **