Wednesday, January 19, 2011

உனக்கே உயிர்க்கிறேன்....நித்திலமே....!
முழுமதியின் ஒளியெல்லாம்
வழியினிலே விழுங்கிக் கொண்டு....
பனியுதிர்த்த இராப்பொழுதை
புலராதிருக்கப் பனித்து விட்டேன்.

பண்பிதமே...!
சிறு நெருஞ்சிப் பூக்களிடை
சில்வண்டு ரீங்கரிக்க
சிறு பொழுதும் கண்கொட்டா
சிலைஎனவே சமைந்துவிட்டேன்.

கடுங் குளிரோ கனலாச்சே
கருவிழியும் வெளுத்தாச்சே
வெஞ்சினத்து மூச்சினிலே
பூந்துகிலும் பழுதாச்சே

கதிரவனே வந்துவிட்டான் - நின்னை
கனவாய்க்கூட காணலியே.

சகத்தோசை அடங்கிவிட
இற்றுபோகா அகத்தாசை
ஒங்கரிக்க ....
கால்சோர....மனம்தளர ..
மதிமயங்கிச் சரிகின்றேன்...

அன்பெனும் மழை வேந்தே..
-நின்
அமிழ்தத்தின் ஓர் துளிக்காய் ...
ஓயாமல் ஓய்ந்திருக்கேன்.

Thursday, December 16, 2010

* நீர்க்குமிழி *

நினைவுகளின் நீர்க்குமிழிகளே..!
நிற்காதோ உம் நடனம்?!

நேசமிகு பொழுதெல்லாம் நின்
குமிழிக்குள் பொத்தி வச்சேன்..!

வண்ண வண்ண மிளிரல்களை
வாயூர இரசித்திருந்தேன் ...!!

"நீ"...
வெடித்து சிதறுகையில்...
உயிர் கூட்டில் போட்டு வச்ச
மாக்கோலம் பாழாச்சே...!

நெஞ்சத்தின் சித்திரத்தில்
செதுக்கி வச்ச புன்னகையும்
போன இடம் புரியலையே...?!

நனிச் சிறப்பே..! நேசமே..!!
நிம்மதியின் வாசல் வழி
வரமறுக்கும் நித்திரையே...!
பேரொளிக்கு ஏங்கும்
பெருவெளியின் பாழ் இருட்டே...!

என் சிந்தை தளும்பும்
உணர்வுத் திமிறல்களை
மீட்டெடுக்க வாரீரோ...??

ஒப்புமைக் கடங்காத
நித்திய நிசங்களினை....
தொடுத்தெடுத்துத் தாரீரோ...?

Sunday, December 12, 2010

"விசித்திரம்....!"

கெஞ்சினால் விருந்தாகும்
கொஞ்சினால் மருந்தாகும்
விஞ்சினால்.... நஞ்சாமோ...?!

"என் சிந்தையை சுட்டினாய்"
"என்னடி யோசனை......??" - என
"ம்".... முடிப்பதற்குள்...,
விஞ்சியிருந்தாய்.

விருந்தல்ல...
மருந்தல்ல....
நஞ்சல்ல....

"இது"........
வினோதம்....!

நீயாகிய நான்....!
நானாகிய நீ....!
நாமாகும் போதெல்லாம்
நிகழ்ந்துவிடும் "நிசப்தம்".

நஞ்சல்ல......
மருந்தல்ல.....
விருந்தல்ல....

விளங்கிக் கொள்ளா
"விசித்திரம்"....!!
**********************************************

"வி...ம்...ம...ல்....!!"வழுக்கு மரம் மீதேறும்
நெஞ்சத்து நிசங்களில்

திராவகம் ஊற்றும் சூழல்..!!


உருக்குலைந்த போதும்

கருக்குலையா கவனத்துடன்

விழிவெடிக்கும் விம்மல் வேகத்தில்.....


உயிர்த் துணையே - நின்

நேசம் தழுவிக் கிடக்கிறேன்.

**************************************************

Wednesday, December 8, 2010

கண்ணாமுச்சி


உள்ளத்து வெம்மூச்சில்
குளிர்திலகம் வருத்துதிர்ந்து
கன்னக் கதுப்புகளில்
கரு நிறத்தை வார்த்தெடுக்க
கலையொளிரா கண்குழியில்
இருள் சூழ......

மேலிமையை இழுத்தணைத்து
இருவிழிகள் உறைந்தே கிடக்க
விதி உழுத பள்ளம்தனில்
வேரூன்றி விரவிக்கிடக்கும்
காட்டுக் கொடிகளாய்
நினைவுகளுக்குள் கனவுமுடிச்சிகள்.

உள்ளத்து உயிரணைப்பில்
பவளமல்லி பூஞ்செறிவில்
புகுந்தாடும் பொன்வண்டாய்
நிகழ்வுகளின் நெடுநேர சலசலப்பு

ஓர் சதுரங்க புதிர்போல
பூத்தடங்கி பூரிக்கும் யவ்வனங்கள்
சங்கேத சினுங்கல்கள்...

சற்றேறக் குறைய
சொக்கிச் செருகிக் கொண்ட
சிந்தைகளின் நடுவே....

கனவு முடிச்சுகள்-
மலரிடை தேன் முத்துக்களாய்
சொட்டு சொட்டாக
மனதின் விழி வழியே வழிய... வழிய...

நாணத்தின் நரம்புகள்
நாணல்களாய் வளைய...வளைய...
நெஞ்சினிக்க நிகழ்ந்த தருணங்கள்
கனன்று கனக்க...

மௌனம் மணக்கும் மலராய்
மழலை கொண்ட முத்தமென
மொட்டவிழ முனகலிடும்
உயிரின் ஓசையொடு....
விழியேங்க விழித்திருக்கேன்!!

Tuesday, December 7, 2010

ஆலாபனை


கண்ணொளிரும் காவியமாய்
கனிந்துவந்தக் கலையமுதே!

நின் நினைவாலே நெஞ்சுருகக்
காற்றோடு மனமளந்து
செங்காந்தள் இதழ்கடுப்பப்
பேதையெனப் பூத்துதிர்ந்துக்
காதலொடு காத்திருந்தப் பொழுதெல்லாம்...

புவிபொதிந்த வித்தாக
விருட்சத்து விழுதாக
மன 'முழை'க்குள் (குகை) மூச்சடக்கிக்
கிடந்தேனோ....?!

நன் முத்துச் சிறு நகையே
செம்பவள மலரொளியே
விழியோரம் விடையளித்தாய்
வான்முட்டும் சிறகானேன்.

பாரிஜாத பனிமுத்தே
பன்னீரமுதம் பொங்கும்
பசுஞ்சோலை உன்னில்
பொதிந்திருக்கப் பூக்கின்றேன்.

வெண்பட்டுத் துகில் நெஞ்சில்
பளிங்கு'பூ' இதழ் கொண்டு
வைரத்துச் சிலையுன்னை
வடித்தெடுக்க விழைகின்றேன்.

வானத்து வேர்பிடிக்க
மேகமென அலைகின்றேன்.
விண்மீனைக் கைகொண்டு
வெண்ணிலவாய் காய்கின்றேன்.

உதயத்தில் சீராட்டி
இதயத்து உறவெழுத
கிளை கொண்ட பூங்கொத்தாய்
தென்றலுக்காய் தவமிறுக்கேன்

மழையெனப் பொழிந்திடும் வரமே
உறை பனியெனக் குளிர்ந்திடும் உயிரே
எனை வாழ்விக்க வந்தக் கலையே

விழி நீரில் வழியமைத்தேன்
வேண்டுமட்டும் சுவை நிறைத்தேன்
இன்னிசையே நீ மீட்ட
வீனையெனக் கொலுவிருக்கேன்

அல்லிப்பூ அழகு நீவி
அமுத நாதம் இசைத்திடுவாய்
தித்திக்கும் தீந்தமிழில்
பண் ஆரம் பூட்டிடுவாய்

தென்னை இளம் பாலை
தேமதுரப் பூமாலை-நின்னை
பணிந்தணிந்து உயிர்த்திறுக்கேன்
என்னரசே....!
எழிலிதமே...!!
திளைத்திட வா....கற்பகமே!!!

Sunday, December 5, 2010

கடற்கரை ஓரத்துப் பள்ளிக்கூடம்

ஓங்காரத்தைக் கனத்தொலித்து
அயராது ஆனந்த ஆர்ப்பரிக்கும்
கடலன்னையின் கைக்குழந்தையாகி
சிலநிமிடம் ….

இமை போர்த்தி செவி சாய்க்க
சில்லிப்பாய் சிருங்கார சலனங்கள்
மனமெங்கும் தேனமுதம் நிரப்பத்
தழைத்தெழுந்த ஆன்ம இராகம்
கடலலையாய்

கும்மாளக் கூத்திட்டுக்
குதூகளித்தக் கணங்களில்
கட்டித் தழுவி முட்டி மோதி
முயங்கிக் கிறங்கிய உயிர் வலியை
தூரிகைக்கு வரமெனத் தருகிறேன்.

கண்ணிமைக்கா சிறு பொழுதில்
தமிழதன் வனப்பினை
மிடுக்கென உடுத்திக்கொண்டு
காகிதக் கரையோரம்
தடம் பதிக்கத் தயாராக - இதோ
என் தர்மத் தூரிகை.
தீஞ்சுடர் ஒலியொத்தத்
தேன் மலர் நிறை மரத்தின் மீது
கருநிறக் காக்கைக் குழாம்
கருமேகம் அடர் நிறமோ ? –எம்
கருஞ்சிறகின் நிறம் விஞ்சுமோ -என
முகிலோடு தாம் கொண்ட வாதங்களை
கரகரவென்றுக் கரைந்துக்
கொட்டித் தீர்த்தன.
மண்ணோடு மோகம் கொண்ட
மேகக் கூட்டம் முடிந்தமட்டும்
குளிர் மூச்சை உள்ளடக்கி -தன்
காதல் கரைத்துக் காதல் கரைத்து
உயிர் நீரென ஊற்றாற்று மடைதிறக்க
மழைமழை ….

இடி மின்னல் மோதி மிரட்டா
ஆலிங்கண இசை மழையில்
பூரித்துப் பூத்திட்டப் பூமிப் பெண்ணின்
மன வாசம் மண் நிறைக்க
சுக நாதம் சுகந்தங்களை மீட்டெடுக்க
சொல்லொணா சித்திரப் பூக்களாய்
சிலிர்த்துக் கிடந்த நங்கையின்
நெற்றித் திலகமென படர்ந்திருந்த
ஒரு பசுமரத்து உச்சிக் கிளை !
உள்ளே …! முக்கிலைகள் கூடுமிடத்து
கட்டிக்கிடந்தக் காக்கைக் கூடு
இசை மழைக்கு ஜதி சொல்லும்
குஞ்சுக் குரல்கள் கொஞ்சலிட
கண்டேன்கண்டேன் ….
கூட்டுக்கு சிறகு போர்த்தி
தாய் காகம் குடையாக நின்றக் காட்சி
கண்ணாரக் கண்டேன் !

தாய்மையின் உயரம் கண்டு
அயர்ந்துதளர்ந்து
கையெடுத்துத் தொழுதழுதேன்.
தன்னலம் இற்றுப் போன
தாய்மையைக் கர்ப்பித்தப் பெருமிதத்தில்
கம்பீரம் வழிய நின்றதுஅந்த
கடற்கரை ஓரத்துப் பள்ளிக்கூடம்…!!