Tuesday, June 22, 2010

முக்கனி


அன்பே !

என் மனதின் கதறல்களை

உன் கண்ணீருக்கு சமர்ப்பிக்கிறேன்

அழுது தீர்த்துவிடு .


அழகே …

என் களங்கமில்லா காதலை

உன் நெஞ்சுக்குள் விதைக்கிறேன்

நேசத்தால் நீவிவிடு .


அறிவே …

என் கண்ணோர கனவுகளை

உன் கனிவோடு கலக்கிறேன்

நம்

கம்பீரக் கலை எழுது .

அகமுடைமை


அன்பே …!

மனதின் காதுகளில்

கிசுகிசுக்கும்...

நின் புல்லாங்குழலின்

நாசித் துளைகளில்-


நாதம் எழும்பும் முன்னே

நாணம் வந்து மூடிவிட

நாவடைத்துக் கொண்டதோ ?!


மோனத்துக்குள் நனைந்து

நளினமாய் மூடிக் கொள்கிறது !


இன்னமுதே …

இசையுருவே


இதய நாதம் இசைக்கிறேன்

தென்றலென வருடாயோ


தேனின்பப் பூம்பனியாய்

புத்துயிர்க்கத் தழுவாயோ


தீதறுக்கும் தனலோசை

செவிமடுக்கத் தாராயோ


தெளிநினைவில் திளைக்கிறேன்

திசை சொல்லி உதவாயோ


தருமத்துத் தலை உயிரே

தார்மீகக் கலை எழிலே


தவிக்கத் தவிக்கத் தேடுகிறேன்

தகிக்க தகிக்க உறைகிறேன்


உருமாறி உயிர்மாறி

விழி கலங்க வியர்கையிலே

இள நகையில் எனையாளும்

பதம் எதுவோ ?

பவித்திரமே !

' வேள்வி '


நீ சொல்வாய் என நானும்


நான் சொல்வேன் என நீயும்

காதலை சிதை ஏற்றினோம்

சிதையனைக்கப் பதறும் விழிகளை

அணைத்து வழிகிறது செந்நீர் .

Monday, June 21, 2010





மனித அறிவு கண்டெடுத்த
பொக்கிஷம்
"அறிவியல் "

மனம்
தொலைத்திட்ட அறிவு......
" காதல் "

Sunday, June 20, 2010

நிசம்தானா நேசமே?!


முகிலிதமே … மனதுயிரே !

முழு மூச்சாய் சேகரித்து

மூச்சடக்கி முடக்கிவைத்த

என் நெஞ்சத்து நேசமெல்லாம்

நின் நிழல் கண்ட ஓர் நொடிக்குள்

நூராயிரம் வேர் வெடிக்க

ஓர் பூவாய் பூத்திருக்கு !


உளம் பிளந்து

உயிர் திணித்து

வேர் பிடிக்க

இளமை உறிஞ்சும்

உணர்வுப் பூவேஇதோ


கீழிமையோரம் தளும்பி நிற்கும்

என் விம்மல்களின் மிச்சம்


பகற் கனவுகளின்

பல்லாங்குழி ஆட்டத்தில்

வெம்பி விழுந்து இற்றுப்போன

வெற்றுப் பார்வை


விடைத்து சிவந்து

கருத்துத் துடிக்கும்

நாசிக் குருக்குகள்


வெறுமை விடியல்களில்

குடைசாயும்

நிகழ்கால நிமிடங்கள் …


இப்படியாகத்தான்

என்னில் எனில்

நீமலர்ந்தது நிசம்தானா ?!

நேசமே !