Sunday, December 5, 2010

கடற்கரை ஓரத்துப் பள்ளிக்கூடம்





ஓங்காரத்தைக் கனத்தொலித்து
அயராது ஆனந்த ஆர்ப்பரிக்கும்
கடலன்னையின் கைக்குழந்தையாகி
சிலநிமிடம் ….

இமை போர்த்தி செவி சாய்க்க
சில்லிப்பாய் சிருங்கார சலனங்கள்
மனமெங்கும் தேனமுதம் நிரப்பத்
தழைத்தெழுந்த ஆன்ம இராகம்
கடலலையாய்

கும்மாளக் கூத்திட்டுக்
குதூகளித்தக் கணங்களில்
கட்டித் தழுவி முட்டி மோதி
முயங்கிக் கிறங்கிய உயிர் வலியை
தூரிகைக்கு வரமெனத் தருகிறேன்.

கண்ணிமைக்கா சிறு பொழுதில்
தமிழதன் வனப்பினை
மிடுக்கென உடுத்திக்கொண்டு
காகிதக் கரையோரம்
தடம் பதிக்கத் தயாராக - இதோ
என் தர்மத் தூரிகை.
தீஞ்சுடர் ஒலியொத்தத்
தேன் மலர் நிறை மரத்தின் மீது
கருநிறக் காக்கைக் குழாம்
கருமேகம் அடர் நிறமோ ? –எம்
கருஞ்சிறகின் நிறம் விஞ்சுமோ -என
முகிலோடு தாம் கொண்ட வாதங்களை
கரகரவென்றுக் கரைந்துக்
கொட்டித் தீர்த்தன.
மண்ணோடு மோகம் கொண்ட
மேகக் கூட்டம் முடிந்தமட்டும்
குளிர் மூச்சை உள்ளடக்கி -தன்
காதல் கரைத்துக் காதல் கரைத்து
உயிர் நீரென ஊற்றாற்று மடைதிறக்க
மழைமழை ….

இடி மின்னல் மோதி மிரட்டா
ஆலிங்கண இசை மழையில்
பூரித்துப் பூத்திட்டப் பூமிப் பெண்ணின்
மன வாசம் மண் நிறைக்க
சுக நாதம் சுகந்தங்களை மீட்டெடுக்க
சொல்லொணா சித்திரப் பூக்களாய்
சிலிர்த்துக் கிடந்த நங்கையின்
நெற்றித் திலகமென படர்ந்திருந்த
ஒரு பசுமரத்து உச்சிக் கிளை !
உள்ளே …! முக்கிலைகள் கூடுமிடத்து
கட்டிக்கிடந்தக் காக்கைக் கூடு
இசை மழைக்கு ஜதி சொல்லும்
குஞ்சுக் குரல்கள் கொஞ்சலிட
கண்டேன்கண்டேன் ….
கூட்டுக்கு சிறகு போர்த்தி
தாய் காகம் குடையாக நின்றக் காட்சி
கண்ணாரக் கண்டேன் !

தாய்மையின் உயரம் கண்டு
அயர்ந்துதளர்ந்து
கையெடுத்துத் தொழுதழுதேன்.
தன்னலம் இற்றுப் போன
தாய்மையைக் கர்ப்பித்தப் பெருமிதத்தில்
கம்பீரம் வழிய நின்றதுஅந்த
கடற்கரை ஓரத்துப் பள்ளிக்கூடம்…!!

No comments:

Post a Comment