
கண்ணொளிரும் காவியமாய்
கனிந்துவந்தக் கலையமுதே!
நின் நினைவாலே நெஞ்சுருகக்
காற்றோடு மனமளந்து
செங்காந்தள் இதழ்கடுப்பப்
பேதையெனப் பூத்துதிர்ந்துக்
காதலொடு காத்திருந்தப் பொழுதெல்லாம்...
புவிபொதிந்த வித்தாக
விருட்சத்து விழுதாக
மன 'முழை'க்குள் (குகை) மூச்சடக்கிக்
கிடந்தேனோ....?!
நன் முத்துச் சிறு நகையே
செம்பவள மலரொளியே
விழியோரம் விடையளித்தாய்
வான்முட்டும் சிறகானேன்.
பாரிஜாத பனிமுத்தே
பன்னீரமுதம் பொங்கும்
பசுஞ்சோலை உன்னில்
பொதிந்திருக்கப் பூக்கின்றேன்.
வெண்பட்டுத் துகில் நெஞ்சில்
பளிங்கு'பூ' இதழ் கொண்டு
வைரத்துச் சிலையுன்னை
வடித்தெடுக்க விழைகின்றேன்.
வானத்து வேர்பிடிக்க
மேகமென அலைகின்றேன்.
விண்மீனைக் கைகொண்டு
வெண்ணிலவாய் காய்கின்றேன்.
உதயத்தில் சீராட்டி
இதயத்து உறவெழுத
கிளை கொண்ட பூங்கொத்தாய்
தென்றலுக்காய் தவமிறுக்கேன்
மழையெனப் பொழிந்திடும் வரமே
உறை பனியெனக் குளிர்ந்திடும் உயிரே
எனை வாழ்விக்க வந்தக் கலையே
விழி நீரில் வழியமைத்தேன்
வேண்டுமட்டும் சுவை நிறைத்தேன்
இன்னிசையே நீ மீட்ட
வீனையெனக் கொலுவிருக்கேன்
அல்லிப்பூ அழகு நீவி
அமுத நாதம் இசைத்திடுவாய்
தித்திக்கும் தீந்தமிழில்
பண் ஆரம் பூட்டிடுவாய்
தென்னை இளம் பாலை
தேமதுரப் பூமாலை-நின்னை
பணிந்தணிந்து உயிர்த்திறுக்கேன்
என்னரசே....!
எழிலிதமே...!!
திளைத்திட வா....கற்பகமே!!!
No comments:
Post a Comment